சாய்பாபாவின் 84 வது பிறந்த நாளை ஒட்டி அவர் மக்களுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கேளுங்கள். : * அன்பே சிவம். சிவமே அன்பு. அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார். ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள். உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.
* நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெளியுலக வாழ்வில் எத்தனையோ சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்கின்றன. அப்போது அச்சூழ்நிலை நம்மைத் தாக்காதபடி, நம்பிக்கையே கவசம் போல் பாதுகாக்கும்.
* நல்லனவற்றை தேடிச் சென்று கேளுங்கள். நல்லதை மட்டுமே காணுங்கள். நல்ல செயல்களைச் செய்யுங்கள். அப்போது நீங்கள் இறையருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதி உடையவராவீர்கள்.
*மிருகவுணர்ச்சி மேலோங்கினால், நாம் அழிவுப் பாதைக்குச் சென்று விடுவோம். தீமையை நன்மையால் வெல்வதைப் போல, மிருக உணர்ச்சியைக் களைந்து தெய்வீக உணர்வினை உள்ளத்தில் பரவவிடுங்கள்.
* மேலான செல்வம் இறையருள் மட்டுமே. கடவுளிடம் எள்ளளவும் சந்தேகம் கொள்ளாமல் முழுமையாகச் சரணாகதி அடைந்து விட்டால், கண்ணை இமை காப்பதுபோல நம்மைக் காத்து கரை சேர்ப்பான்.
* தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்.
* முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்.
* கடவுள் நம்பிக்கை வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமை, கவலை ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் வேர்களைக் களைந்துவிடும். கடவுளை நம்புபவர் முகத்தில் கவலை ரேகைகள் படர்வதில்லை. நடப்பன யாவும் நல்லதற்கே, நடப்பதெல்லாம் அவன் விருப்பப்படி தான் என்ற சிந்தனை மேலோங்கும்.
* அடுத்தவர் மீது குற்றம் காணவும், குறை சொல்லவும் நமக்கு உரிமை இல்லை. அவர்களிடம் கோபப்படவும் உரிமை கிடையாது. நம்மை நாமே தூய்மையாக்கிக் கொண்டு நல்லவனாக வாழ முயற்சிக்க வேண்டும்.
* நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக் கொண்டே போகிறது. பிறவி எடுத்ததன் நோக்கத்தை உணரத் தலைப் படுங்கள். கடவுளோடு நம்மை இணைத்துக் கொள்ளும் மேலான நிலைக்கு முன்னேறுங்கள்.
* எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஒவ் வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்.
*வெற்றி பெறும்போது, பலரும் கடவுளை மறந்து விட்டு தன் முயற்சியால் வெற்றி வந்ததாக எண்ணி ஆணவம் கொள்கின்றனர். தோல்வியின் போதோ நம்பிக்கை இழந்து கடவுளை நிந்திக்கிறார்கள். ஆனால், உண்மையான பக்தி உள்ளவன் தன் மனச்சமநிலையை எப்போதும் இழப்பதில்லை.
* மனிதன் இயற்கையிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன. பசு பால் தந்து உலகைக் காக்கிறது. ஆறு நீரைத் தந்து உயிர்களைக் காக்கிறது. அறிவில் குறைந்த பறவை, விலங்கினங் களிடமிருந்து பொது நலமனப் பான்மையை மனிதர்கள் பெற்று வாழ வேண்டும்.
-

No comments:
Post a Comment