Tuesday, January 26, 2010

முழு 'சுதந்திரம்' பெற்ற நாள் : இன்று 61வது குடியரசு தினம்...


இந்தியா 1947 ஆக. 15ல் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெற்றாலும் கூட, அது அரசுரிமை (டொமினியன்) அந்தஸ்து கொண்ட நாடாகத்தான் விளங் கியது. பிரிட்டிஷ் மன்னர் ஆறாம் ஜார்ஜ்தான் அப்போது பெயரளவிலான மன்னர். 1950 ஜன.26ல் இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட போது தான் முழுக் குடியரசு ஆனது.

1930களிலேயே இந்திய குடியரசுக் கனவு நாட்டின் தலைவர்களிடம் இருந்தது. 1929 டிச. 31ல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில், 1930 ஜன.26ல் இந்தியா முழுவதும் "பூர்ணசுயராஜ்ய' தினம் அனுசரிப்பது என்று தீர்மானித்தனர். இந்த மாநாடுதான் ஒத்துழையாமை இயக்கத்துக்கு வழிவகுத்தது. இந்தியாவில் நெருக்கடியை உணர்ந்த பிரிட்டிஷார், சுதந்திரம் அளிக்க முடிவு செய்தனர். 1946ல் பிரிட்டிஷாரின் கேபினட் குழு, இந்திய தலைவர்களிடம் பேசியதன் விளைவாக இந்திய அரசியல் சாசன நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இந்த சபையின் நோக்கம் இந்தியாவை வழிநடத்தும் அரசியல் சாசனத்தை உருவாக்குவதே. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர், பலமுறை திருத்திய பின்னர், 1949 நவ.26ல் அரசியல் சாசனத்தின் இறுதி வடிவம் ஏற்றுக் கொள் ளப்பட்டது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தாலும் கூட, உண்மையான சுதந்திரம் என்பது 1950 ஜன.26லிருந்துதான் துவங்குகிறது. அன்றிலிருந்துதான் இந்திய அரசியல் சாசனம் அமல் செய்யப் பட்டது. ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக தேர்வானார்.

பெருமைமிகு இந்தியா: இந்தியா எப்போது வல்லரசாகும்... என்ற கேள்வி எல்லோரது மனதிலும் இருக்கிறது. வல்லரசாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறுவோரும் உண்டு. பரீத் சகாரியா எனும் அறிஞர், இந்தியா வல்லரசு ஆவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று கூறி வருகிறார். இந்தியாவில் உள்ள இளைஞர் பட்டாளம்தான் அதை சாத்தியமாக்கப் போகிறார்கள். சீனாவை விட, ஆங்கிலம் பேசும் இளைஞர்கள் இருப்பதும், வளர்ந்த நாடுகளில் முதியோர் எண்ணிக்கை சுமையாக அதிகரித்து வருவதுமே இந்தியா வல்லரசாகும் வாய்ப்பு களாக அமையும் என்கிறார். வேறு எந்த நாட்டையும் விட 60 ஆண்டுகளாக ஜனநாயகம் எனும் விஷயத்தில் இந்தியா இரும்பு போல் உறுதியாக இருந்திருக்கிறது என்பதும் அவர் வாதம். பராக் கன்னா என்பவர், ஏழைகளை சுமந்து கொண்டுள்ள இந்தியாவால் எப்படி வல்லரசு ஆக முடியும் என்கிறார். இந்தியா பெரிய நாடுதான் - ஆனால் அதனால் எந்த முக்கியத்துவமும் இல்லை என்கிறார் அவர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று கணித்திருந்தார். இன்னும் 10 ஆண்டுகளில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் கூட, 2030ம் ஆண்டில் இந்தியா நிச்சயமாக வல்லரசாகும் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்ற வேட்கை மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் காணப்படுகிறது. அந்த வேட்கை ஒன்றே இந்தியாவை வெகு விரைவில் வல்லரசாக்கிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் விழா: குடியரசு தினத்தன்று டில்லியில் கோலாகல விழா நடைபெறுகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கொடியேற்றுகிறார். ராஜ்பாத்தில் குடியரசு தின ராணுவ மற்றும் கலாசார அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்துகின்றன. வெளிநாட்டு அதிபர் அல்லது பிரதமர் (இம்முறை தென் கொரிய அதிபர் லியங்பாக்) விருந்தினராக இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார். வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி ஜனாதிபதி கவுரவிக்கிறார். குடியரசு தின விழாக்கள் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றன. இந்த மூன்று நாட்களும் ராஷ்டிரபதி பவன், அதையொட்டியுள்ள அமைச்சக அலுவலகங்கள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி குடியரசு தின நிறைவு விழா நடக்கிறது. இதில் குடியரசு தினத்துக்காக, வந்த முப்படையினர் தங்கள் பாசறைக்கு திரும்புகிறார்கள். இதற்கான வழியனுப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் இசைக்கலைஞர்களின் டிரம் இசை, அணிவகுப்பு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டிரம்மர்கள் இசைகளில் "அபைட் வித் மீ ' (காந்தியடிகளுக்குபிடித்தது) இசைக் கும் முக்கிய இடம் உண்டு. படையின் பேண்ட் மாஸ்டர் ஜனாதிபதியிடம் சென்று, விடைபெறுவதற்கு அனுமதி கேட்பார். அப் போது நிறைவு விழா முடிந்ததாக மாஸ்டர் அறிவிப் பார். "சாரே ஜகான் சே அச்சா' எனும் வீரம் செறிந்த இசையை இசைத்தபடியே முப்படையினரும் பாசறை திரும்புவார்கள்.

குடியாட்சி... முடியாட்சி: இன்று குடியரசு தினம் கொண்டாடுகிறோம். "குடியரசு' என்ற பெயரை எத்தனையோ நாடுகள் சூட்டிக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா போல் உண்மையான குடியரசை நாம் பார்ப்பது அரிது. ஒரு நாடு குடியரசு நாடு என்று அழைக்கப்படுமானால் - அங்கு மன்னர் ஆட்சி இருக்கக்கூடாது. ஓட்டெடுப்பு வழியாக ஆட்சி அதிகாரத்தில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கப் பட்டிருக்க வேண்டும். குடியரசு நாடுகளில் குடியரசுத் தலைவரான ஜனாதிபதி, நேரடியாகவோ அல்லது மக்களால் தேர்வு செய்யப் பட்ட பிரதிநிதிகள் வழியாகவோ தேர்வு செய்யப்படுகிறார். நேரடியாக தேர்வாகும் ஜனாதிபதிகள் அரசுத் தலைவராக விளங்குகிறார். பிரதிநிதிகள் வழியாக தேர்வாகும் ஜனாதிபதிகளைக் கொண்ட நாட்டில் பிரதமரே நாட்டின் அரசுத்தலைவராக விளங்குகிறார். நேரடியாக ஜனாதிபதிகளை தேர்வு செய்யும் இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகள் குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சி செய்யும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியா போன்ற நாடுகளை பார்லிமென்ட் குடியரசு ஆட்சி செய்யும் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. பிரான்சில் பிரதமரும் ஜனாதிபதியும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜெர்மனி இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவராக தேர்வாகும் தலைவர் கட்சி சார் பற்றவராக இருக்க வேண்டும். பார்லிமென்ட் ஜனநாயகப் படி, ஓட்டெடுப்பின் மூலம் பிரதமர் தலைமையில் பிரிட்டனில் அரசு அமைந்தாலும் கூட, பிரிட்டனில் இன்றும் முடியாட்சிதான். அங்கு ராணிதான் நாட்டின் தலைவராகக் கருதப்படுகிறார்.

மூவர்ணக் கொடி

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரதமர் கொடியேற்றும் வழக்கம் துவங்கியது.

1950 ஜனவரி 26ல் இந்தியா குடியரசானதிலிருந்து அதன் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அத்தினத்தில் கொடியேற்றும் வழக்கம் வந்தது.

1947ல் ஜனாதிபதி என்ற பதவி இல்லை. ஆகவே, அன்று யார் கொடியேற்ற வேண்டும் என்ற குழப்பம் இல்லை. இவ்விரண்டு நிகழ்ச்சிகளும், இரு பெரிய தலைவர்கள் கவுரவம் பெறும் தனித்தனி நிகழ்ச்சிகளாக அமைந்துவிட்டன. டில்லியில், சுதந்திரத் தினத்தன்று செங்கோட்டையிலும், குடியரசு தினத்தன்று, ராஜ்பாத் அருகேயும் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம், ஜாலியன் வாலாபாக் தேசிய வாரம் (ஏப். 6 -13) ஆகிய தேசிய தினங்களிலும் மாநிலங்கள் உருவான மாநில தினங் களிலும், தலைவர்கள் மறைவின் போது, தேசியக் கொடியை அரைக்கம் பத்தில் பறக்கவிடக்கூடாது. இத்தினங்களில் உடல் எங்கு வைக்கப்பட்டுள்ளதோ அங்குள்ள கட்டடத்தில் மட்டுமே அரைக் கம்பத்தில் கொடி பறக்கவிடலாம்.

காந்தியின் பேனாமுனை போராட்டங்கள்: இந்திய சுதந்திரப் போராட் டத்தில், பத்திரிகைகளுக்கு மிகுந்த பங்கு உண்டு. குடியரசு இந்தியாவில் அந்த போராட்டங் களை நினைவு கூர்வது நாம் காந்திக்கு செய்யும் மரியாதையாகும். திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.சஞ்சய், "காந்தியும் இதழியலும்' என்று தி ஹூட் இதழுக்கு எழுதியதன் சுருக்கமான தமிழாக்கம். பத்திரிகைத் துறைக்கான கொள்கைகளை வகுத்து அதன் படியே நடந்தவர் மகாத்மா காந்தி. வழக்கறிஞரான காந்தி, தென் ஆப்ரிக்காவில் பணிபுரிவதற்காக சென்றார். அங்கு வாழ்ந்த இந்தியர்கள், அவர்களது பிரச்னை ஆகியன அவர்களுக்காகப் போராடும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போது பத்திரிகைகளுக்கு கடிதம் மற்றும் பேட்டிகள் வாயிலாக கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் அங்கு தொடர்ந்து வரும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, 1903ல் அவர் தென் ஆப்ரிக்கா வாழ் இந்தியர்களுக்காக "இண்டியன் ஒபினியன்' எனும் தனது வாரப் பத்திரிகையை துவக்கினார்.

மக்களுக்கு தெரிந்த மொழியில் பத்திரிகையை வெளியிடுவதுதான் மக்களை சென்றடைய முடியும் என்பதை காந்தி நம்பினார். ஆங்கிலம், குஜராத்தி, தமிழ் மற்றும் இந்தியில் அவர் பத்திரிகையை வெளியிட்டார். இந்த பத்திரிகையின் முக்கிய நோக்கமே எதையும் எதிர்பாராத சேவைதான். பத்திரிகையின் கொள்கையை 1903 ஜூன் 6 இதழில் அவர் வெளியிட்டுள்ளார். பொதுத் தகவல்கள், இந்திய செய்தி சுருக்கம், வர்த்தக விபரங்கள், சமூகம் மற்றும் அறிவார்ந்த விஷயங்களில் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கட்டுரைகள் ஆகியன அந்த இதழில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டது. இந்தியர்களின் தரப்பை ஐரோப்பியர்களுக்கு உணர்த்துவதை பத்திரிகை நோக்கமாக கொண்டிருக்கும் என்றும் வர்த்தக நோக்கம் அல்லாத விளம்பரங்கள் மக்களுக்கு உதவும் என்பதையும் காந்தி வெளிப்படுத்தியிருந்தார். 1915ல் காந்தி இந்தியா திரும்பிய பின்னர், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் பத்திரிகை வாயிலாக போராடினார் என்றால், அதற்கு "இண்டியன் ஒபினியன்' பத்திரிகை நல்ல அடித்தளமிட்டது. அவரது குரு கோகலேயின் அறிவுரைப்படி, தாய்நாட்டை அறிந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் செய்தார். சம்பரானில் விவசாயிகள் படும் துன்பத்தை அறிந்த அவர் தனது முதல் சத்தியாகிரகத்தை அங்கு துவங்கினார். அப்போது, இந்திய பத்திரிகை தேசிய உணர்வு பீறிட்டது. ஆங்கில சார்பு பத்திரிகை மற்றும் இந்தியர்களுக்கான பத்திரிகை என்பதை பிரித்துணரும் காலம் வந்தது. வெளியான இந்திய தரப்பு செய்திகளுக்கு அப்போது அரசும் செவிசாய்க்கத் தொடங்கியது.

சத்தியாகிரக ஆதரவாளரான "பாம்பே கிரானிக்கிள்' பத்திரிகையின் ஆசிரியர் ஹார்னிமேன் நாடுகடத்தப்பட்ட போது, அப்பத்திரிகை சார்பில் வெளியான "யங்இந்தியா' பத்திரிகைக்கும் காந்தி ஆசிரியரானார். நவஜீவன் (குஜராத்தி), ஹரிஜன் (ஆங்கிலம்), அரிஜன் சேவக் (இந்தி) மற்றும் அரிஜன் பந்து (குஜராத்தி) ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார். கிராமப்புறங்களில் காணப்படும் தீண்டாமை மற்றும் ஏழ்மையை ஒழிக்க அவர் அப்பத்திரிகைகளை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டார். தன்னுடைய கோட்பாடுகள் அடிப்படையிலேயே அவர் தனது பத்திரிகையை நடத்துவதாகவும் தெரிவித்தார்.காந்தியின் எழுத்துக்கள் அவதூறாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் இருக் கின்றன என்று சிலர் கூறினார்கள். என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் விஷம் கக்கியதில்லை என்று காந்தியே கூறியிருக்கிறார். என்னுடைய எழுத்துக்களில் கோபம் இல்லை. சமய நெறிகளுக்கு மாறாக நடப்பதில்லை. ஆட்சியாளர்களுக்கு பகைமை சூடுவதன் மூலம் வெற்றி அடையலாம் என்று நம்பவில்லை. இந்த உலகில் அன்பு நிலைத்திருப்பதால், எந்த தனி மனிதரின் மீதும் வெறுப்பு இல்லை என்றார். இந்துக் களோ முஸ்லிம் களோ, குஜராத்திகளோ தமிழர்களோ அல்லது வங்கத்தினரோ அவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் களையப்பட வேண்டும் என்றார்.

காந்தியடிகளின் இந்த பண்புகள் மதச்சார்பின்மை தொடர் பான நமது பாரம்பரிய உன்னதங்களை வெளிக்காட்டியது. ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுதினாலும் அதற்காக பத்திரிகை ஆசிரியர் மன்னிப்புக் கேட்க வேண்டியது இல்லை. அவ்வாறு மன்னிப்புக் கேட்பதைவிட பத்திரிகையை மூடிவிடுவது சிறந்தது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். பத்திரிகை சட்டம் (1910), தொடர்பாக கேட்டபோது பத்திரிகைகள்தான் பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தும் கருவி என்றார். அரசு அதை உணர்ந்து கொள்வது முக்கியம் என்றார். அச்சு இயந்திரங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது தொடர்பாக அவர் கவலைப்படவில்லை. கையால் எழுதிக்கூட பத்திரிகைகளை வெளியிட்டுக் கொள்ள முடியும் என்று அவர் கருதினார். ஒரே நேரத்தில் 50 பேருக்கு ஒரு விஷயத்தை எழுதச் சொல்லி அவர்கள் அதைப் பிரதி எடுத்து பல மடங்காக்கி வினியோகம் செய்யும் முறையை தெளிவாக விளக்கினார். தேசத்தந்தை காந்தியடிகளின் வாழ்க்கை பாடங்கள் நிறைந்தது. நாம் உள்ளீர்த்துக் கொள்ளும்படியான போதனைகள் நிறைந்தது. சமத்துவமின்மைக்கு எதிராகவும் மதச்சார்பின்மையைக்காக்கவும் போராடுவது ஆகியன அவர் தந்த பாடங்கள். முழு நிறைவான சிறந்த கொள்கைகளை அவர்பத்திரிகை வாயிலாக பரப்பியதை நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண் டும்.

No comments:

Post a Comment