Sunday, January 3, 2010

மதிமயக்கும் மாய வலை : உரத்த சிந்தனை...

சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு அலாதியானது. மற்றவர்களுக்கு சினிமா வெறும் பொழுதுபோக்கு. ஆனால், இங்கே அது ஒரு வழிபாடு. சினிமா அரங்குகளை விட்டு மக்கள் விலகினாலும், சினிமா அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து விலகுவதாக இல்லை. அது தொலைக்காட்சி மூலம் அவர்களை வீட்டுக்குள் சிறைப்படுத்தி, மக்களின் மூளையை, சிந்திக்கும் திறனை, மழுங்கடித்து வருகிறது.

சினிமா தொடர்புடைய ஐந்து பேர் இதுவரை தமிழக முதல்வர்களாக வந்துள்ளனர். ஆனால், அடுத்த முதல்வரும் சினிமா உலகிலிருந்து தான் வரவேண்டும் என்ற மனோபாவத்திற்கு, தமிழர்களை தள்ளியிருப்பது தான் மடமை. ஆபாசமாக நடிக்கும் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது, நடிகர் - நடிகையருக்கு தங்கள் ரத்தத்தால் கடிதம் எழுதுவது, காணிக்கை என்ற பெயரில் தங்கள் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் சைக்கோ ரசிகர்கள், மகளின் கொலுசை அடகு வைத்து, தன் அபிமான ஹீரோவின் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, நடிகைகளை தேவதைகளாக எண்ணி, அவர்களையே மணப்பேன் என்று அடம்பிடித்து தங்கள் வாழ்வை அழித்து கொள்ளும் இளைஞர்கள்; தொழிலையும், பணத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் தொழிலதிபர்கள் ஏராளம். தங்கள் அபிமான நடிகர் நடித்த படம் ரிலீஸ் ஆனால், வீடு, குடும்பம், வேலை, படிப்பு என்று அனைத்தையும் மறந்து தியேட்டரிலேயே தவம் கிடக்கின்றனர். நடிகருக்கு கட்-அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்து, அரங்கு இருக்கும் சாலையை ஸ்தம்பிக்க செய்து, போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகின்றனர்.

இந்த அப்பாவி இளையதலைமுறையினருக்கு பதிலுக்கு கிடைத்தது என்ன? தங்கள் அபிமான நடிகரை, அவரது பிறந்தநாளில் வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கூட கிடைப்பதில்லை. சொல்லி வைத்தாற்போல் ஒவ்வொரு பிரபல நடிகரும், தம் பிறந்தநாளுக்கு முன் ஒரு அறிக்கை விடுவர். தான் ஷூட்டிங்கில் வெளிநாட்டில் இருப்பதால், பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் என்று அறிக்கை கூறும். இந்த அப்பாவி அதையும் நம்பி, நடிகரை வாழ்த்துவார். அந்த நடிகர்களோ நட்சத்திர ஓட்டலில் கொட்டம் அடிப்பர். இந்த ரசிகர்களால் அந்த நட்சத்திர ஓட்டல்களுக்குள் நுழைய முடியுமா? தங்கள் திறமையை, கல்வியை, உழைப்பை சரியான விதத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொண்டால், நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைவதும் சாத்தியம். தங்கள் துறைகளில் நடசத்திரங்களாக ஜொலிப்பதும் சாத்தியம். இளைஞர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, தங்களுக்கு கிடைத்திருக்கும் பொன்னான பொழுதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி என்ன தான் இந்த தமிழ் சினிமாவில் இருக்கிறது என்று ஆராய்ந்தால், குமட்டல்தான் வருகிறது. பன்ச் டயலாக், குத்து பாட்டு அல்லது ஐயிட்டம் சாங், நாலு பைட்டு, நாலு பாட்டு, காதல் இந்த கண்றாவியை தாண்டி, எந்த தமிழ் சினிமாவும் இல்லை. காதல் மட்டும் தான் வாழ்க்கையா? வாழ்வில் வேறு கதைகளே இல்லையா? மக்களுக்கு காதலை விட்டால் வேறு பிரச்னைகளே இல்லையா?

ஏழைகளுக்கு உதவுவதாக, பணக்காரர்களின் கறுப்பு பணத்தை மீட்டு கதாநாயகன் சாகசம் செய்யும் சில கதைகளும், சமீபத்திய சினிமாவில் உண்டு. கறுப்பு பணத்தில் படுமெடுத்து, வருகிற லாபத்தையோ, நஷ்டத்தையோ கணக்கில் காட்டுவதற்காக சினிமாக்காரர்கள், செய்யும் தொழில் யுக்தி பற்றி, சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன். இவர்கள் சினிமாவில் மட்டுமே ஏழைகளுக்கு உதவுவார்களா? நிஜத்தில் ஏழைகள் கஷ்டப்பட்டு வாங்கிய நிலங்களையும், பினாமி பெயரில் அபகரிப்பவர்களாகத்தானே கதாநாயகர்கள் உள்ளனர். தங்கள் தகுதிக்கு மீறி சம்பாதிக்கும் சினிமாக்காரர்களின் ஊதியம் கோடிக்கணக்கில் எகிறியது எப்படி? சினிமா தியேட்டரில் கண்டபடி டிக்கெட் விலையை உயர்த்தியதால் தான். அது யாருக்கு லாபம் என்று அறியாத ரசிகர்கள், கண்களை மூடிக் கொண்டு கிடைத்த விலைக்கு டிக்கெட்டை வாங்குகின்றனர். மக்களுடைய அன்றாட தேவைக்கான அரிசி, பால், தானியம், காய்கறி, போக்குவரத்து எல்லா செலவுகளும் உயர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று சலுகை கொடுத்ததால் மக்களுக்கு என்ன பயன்? சினிமாக்காரர்கள் கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கவே, கேளிக்கை வரி ரத்து என்ற சலுகை உதவும். தமிழ் சினிமாவில் தமிழர்களுடைய வாழ்வோ, அவர் தம் பிரச்னைகளோ, பண்பாடோ இல்லை. வசனங்களும், பாடல்களும் தரம் தாழ்ந்து போயுள்ளன. ஆனால், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதும் என்ற அறிவிப்பு சரி தானா என்பதை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஒரு சம்பவத்தினால் தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார். சுனாமி என்ற இயற்கை பேரழிவு, ஐந்து வருடங்களுக்கு முன், தமிழக கடற்கரையோர கிராமங்களை தாக்கிய போது, கடலோர மக்கள், உயிர், உடைமை இழந்து வாடியபோது, எப்படி நிம்மதியாக தூங்கினார் ரஜினி? அப்ப இங்கே வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததும், களப்பணி ஆற்றியதும் இந்தி நடிகர் விவேக் ஓபராய் தான்.

எம்.ஜி.ஆர்., நடித்த சினிமாக்களில், சிகரெட் பிடிப்பது, மது குடிப்பதை எல்லாம் எதிர்த்து காட்சிகள் இருக்கும். சொன்னதை போலவே, அவரும் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்தும் விலகியிருந்தார். அவர் படங்களில், பெண்களை உயர்வாக சித்தரித்தார். அவருடைய படங்களில் மூடநம்பிக்கைகள் கிடையாது. அதே சமயம் மூடநம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி, மற்றவர்களின் நம்பிக்கையையும் அவர் கொச்சைப்படுத்தவில்லை. யாருடைய மனதையும் காயப்படுத்தவில்லை. அதனால் தான் அவரை மக்கள் புரட்சித் தலைவர் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். தமிழக முதல்வராக தொடர்ந்து மூன்றுமுறை தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அவர் ஒருவர் தான். சும்மா கிடைத்துவிடவில்லை அந்த சிம்மாசனம், உண்மையாக அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார். வறுமையை போக்கவும், கல்விக்காகவும் வாரி வழங்கிய வள்ளல். அதனால் தான், காலம் கடந்தும் நினைக்கப்படுகிறார்; போற்றப்படுகிறார்.

இப்பொழுது, அத்தனை நடிகர்களும் சேர்ந்தாலும், அவருக்கு ஈடாக முடியுமா? அவர் இறந்தும் வாழ்கிறார். இன்று வரும் அனைத்து படங்களிலும் கதாநாயகன் (வில்லன் அல்ல) நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி கண்டிப்பாக உண்டு. சைட் டிஷ், நைன்ட்டி கட்டிங், குவார்ட்டர் போன்ற அதி முக்கியமான வார்த்தைகளை, இவர்களின் புண்ணியத்தால் சிறுவர்களும் அறிந்து வைத்து உள்ளனர். இன்று, சாராயக் கடைகளில் டீன்-ஏஜ் பசங்களை பார்க்கையில் வயிறு எரிகிறது. உறங்கிக் கிடக்கும் தமிழர்களின் உணர்வு விழித்துக் கொண்டால், இவர்கள் சம்பளமெல்லாம் இப்படி கோடிக்கணக்கில் ஏறாது; அது மட்டும் நிச்சயம்.

                                         - அப்சல், எழுத்தாளர்/சிந்தனையாளர்

1 comment:

Post a Comment