Tuesday, February 9, 2010

பன்னாட்டு நிறுவன ஆய்வுக் கூடங்களின் எலிகளா இந்தியர்கள்?

சாமானியனின் அறிவுக்கெட்டாத சில விஷயங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவை தெளிவாக்கப்படாமலேயே அவன் மீது திணிக்கப்படுகின்றன என்பது தான் கசப்பான உண்மை.

தற்போது, விவசாயிகள் மத்தியில் தகித்துக் கொண்டிருக்கும் மரபணு மாற்ற பி.டி., கத்தரிக்காய் விவகாரமும் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது."மண்ணுக்கடியில் இருக்கும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப் படும் மரபணுவைக் கொண்டு தயாரிக்கப்படும் விதையிலிருந்து வரும் கத்தரிச் செடியின் காய், பூ, இலை, தண்டு என எதைக் கடித்தாலும் புழு செத்து விடும் அளவுக்கு செடி முழுவதும் விஷம் நிறைந்திருக்கும். இதுதான் பி.டி., தொழில் நுட்பம்' என, அறிவியலின் அடிப்படையிலிருந்து பேசுகின்றன விவசாய சங்கங்கள்.ஆனால், "இது அறிவியல், தொழில்நுட்பம். இதெல்லாம் விவசாயிகளுக்குப் புரியாது; இதனால் பலன் அதிகம்னு தெரிஞ்சா எந்த சங்கம் சொன்னாலும் விவசாயிகள் கேட்க மாட்டார்கள். இதத்தான் உபயோகப்படுத்துவாங்க... இப்ப போராடறவங்க, விவசாயிகளே கிடையாது...' என, விவசாயப் பல்கலை தலைமை பேசுகிறது.

மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குறித்த விவகாரம், தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்போது விவாதப் பொருளாகியிருக்கும் கத்தரிக்காய் தான், மரபணு மாற்றப்பட்ட முதல் உணவுப் பொருளாகும்.கத்தரியில், "பேசில்லஸ் துரிஞ்சினியஸ்' என்னும் பாக்டீரியாவிலுள்ள விஷத்தை உருவாக்கும் தன்மையுடைய மரபணு, கத்தரி விதையில் செலுத்தப்படுகிறது. கத்தரிச் செடியில் உள்ள இந்த விஷம், அதைச் சாப்பிடும் சிறிய புழு, பூச்சி, பட்டாம்பூச்சி உள்ளிட்டவற்றை அழிக்கும் தன்மை வாய்ந்நது.அதுவும், தாவரம் அல்லாத ஒன்றை (பாக்டீரியாவின் மரபணு) கத்தரிக்காய்க்குள் புகுத்திச் செய்யும் தொழில் நுட்பம் என்பதால், இது விவசாயிகளையும், நுகர்வோரையும் வெகுவாகக் குழப்பியுள்ளது. இந்த உயிரணு மாற்றங்கள் அந்த தாவரத்தில் பல ரசாயன மாற்றங் களை ஏற்படுத்தி, அதனுடைய செயல்பாட்டில் மாறுதலை உருவாக்கும்.

கண்ணையன் (உறுப்பினர், தென்னிந்திய விவசாய இயக்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு):மக்கள் வரிப்பணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றன. கத்தரிக்காய் நம் நாட்டின் சொத்து என்பதை மறந்து, தொழில்நுட்பம் என்ற பெயரில், நமது விவசாயத்தை படிப்படியாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி நடந்து கொண்டிக்கிறது.அமெரிக்க விதை நிறுவனமான மான்சான்டோவின் கண்டுபிடிப்பு தான் இந்த மரபணு மாற்றத் தொழில்நுட்பம். இதன் உரிமத்தைப் பெற்றுள்ள இந்திய நிறுவனமான மஹிகோ நிறுவனம், இந்த தொழில்நுட்பம் குறித்து பெரிதாக ஆராய்ச்சி எதுவும் செய்யாமலேயே நமது விவசாயிகளிடம் திணிக்கப் பார்க்கிறது.இந்த பி.டி., தொழில்நுட்பத்தில், மருந்து, கத்தரிக்காயின் உள் பகுதிவரை ஊடுருவிச் சென்று தாக்கும் தன்மையுடையது. இதனால், பூச்சி மருந்தின் விஷத்தன்மை காயைப் பாதிப்பதால், அதை உட்கொள்வோருக்கு அலர்ஜி, மலட்டுத்தன்மை, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் வாய்ப்புள்ளது.இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குறிப்பிட்ட மரபணு இந்த ஒரு வகை புழுவை மட்டுமே அழிக்கும். இது தவிர கத்தரியைத் தாக்கக் கூடிய வேறு 7, 8 வகையான நோய்களுக்கு அதற்குண்டான மருந்தை அடித்தே ஆகவேண்டும். அதிக விளைச்சல் கொடுக்கக் கூடிய தன்மையும் இதற்கில்லை.எனவே, இயற்கையாக விளைவிக்கப்படும் காய் மூலம் விவசாயியே விதை எடுத்து, பாதுகாத்து திரும்ப விதைக்கும் முறை இருக்கையில், செயற்கையாக உண்டாக்கப்படும், பாதுகாப்பற்ற மரபணு மாற்ற விதைகள் எதற்கு?

வி.செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி): பி.டி., கத்தரிக்காய் தொழில்நுட்பத்தால் பூச்சித் தாக்குதல் இருக்காது, விளைச்சலும் அதிகமிருக்கும். இதுதான், மான்சான்டோ நிறுவனமும், மஹிகோ நிறுவனமும் சொல்வது.இதற்கு முன்பும் இப்படிச் சொல்லித்தான், பி.டி., பருத்தியை அறிமுகம் செய்தனர். விவசாயிகளும் இவர்கள் சொன்னதை நம்பி தங்களது சொந்த நிலங்களிலும் பெருமளவு குத்தகைக்குப் பிடித்தும் பி.டி., பருத்தியை பயிரிட்டனர்.ஆனால், ஆந்திராவிலும், விதர்பாவிலும் இந்நிறுவனங்கள் சொன்னது போல் எதுவுமே நடக்கவில்லை. பி.டி., பயிரிடப்பட்ட முதல்முறை மட்டுமே ஓரளவு மகசூல் கிடைத்தது. தொடர்ந்து பயிர் செய்தபோது மகசூலும் குறைந்து, மண்ணும் பாதிக்கப் பட்டதால் விவசாயிகள் கடனில் மூழ்கி, தற்கொலை சம்பவங்கள் நடந்தேறின. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வீரிய ஒட்டு விதைகளாலும், ரசாயன உரங்களாலும், டாக்டர்களால் கூட கண்டுபிடிக்க முடியாதவாறு மர்மக் காய்ச்சல், ஒவ்வாமை என மனித இனம் பல வித நோய்த் தாக்குதலைச் சந்தித்து வருகிறது.நாளடைவில் பாரம்பரிய விதைகளும் அழிந்து, மான்சான்டோ நிறுவனமும் விதை வினியோகத்தை நிறுத்தும் நிலை வந்தால், அது நமது நாட்டு விவசாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாய் அமையும்.

"இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் முற்றிலும் முரணானது. எந்த மரபணுவும் தனியாக ஒரு செயலைச் செய்வதில்லை, கூட்டாகத்தான் இயங்க முடியும்; வெட்டி ஒட்டி ஒன்றின் பண்பை மற்றொன்றில் புகுத்துவது எதிர்மறையான விளைவுகளைத் தரக்கூடும் இந்த டெக்னாலஜியே தவறு' என, ஆணித்தரமாகக் கூறிய இங்கிலாந்து நாட்டின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் மரபியல் பேராசிரியர் டாக்டர் மைக்கேல் அண்டோன்யாவின் ஆய்வுக் கட்டுரையுடன் தான் துவங்கியது, டில்லியில் நடந்த மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களால் ஏற்படக் கூடிய நலப் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு.

"மொத்தமும் அபத்தம்; அப்படியும் ஏனிந்த அவசரம்' எனக் கேள்வி எழுப்புகிறார், இந்திய மரபணு மாற்று பொறியியல் அங்கீகாரக் குழுவின் அறிக்கையைப் படித்த பிரெஞ்சு விஞ்ஞானி செரலினி."புழு, பூச்சி, ஓட்டை என எதுவுமே இல்லாமல் காட்சியளிக்கும் பி.டி., கத்தரியில் ஆயிரம் மடங்கு பூச்சித் தெளிப்பான்களை விட அதிகமான பி.டி., நஞ்சை இது கொண்டிருக்கக் கூடும்' என, அமெரிக்க சால்க் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி டேவ் ஷூபெர்ட் கூறியிருக்கிறார்.ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசத்தில் பி.டி., பருத்தியை உட்கொண்ட ஆடுகள் இறந் துள்ளன. ஆஸ்திரியாவில், மரபணு மாற்றப்பட்ட மக்காச் சோளப் பயிர்களை 10 ஆண்டுகளுக்கு மேல் எலிகளுக்குக் கொடுக்கப்பட்டதில் அவற்றுக்கு இனப்பெருக்கச் சிக்கல், மலட்டுத் தன்மை உண்டானது.

மரபணு மாற்ற சோயாவைச் சாப்பிட்ட தாய் எலிகளுக்குப் பிறந்த குட்டிகளின் இறப்பு விகிதம் 6 மடங்கு அதிகரித்துள்ளதாக ரஷ்ய அறிவியல் கழகம் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பி.டி., பட்டாணியை உட்கொண்ட எலிகளுக்கு நுரையீரல் நோய் ஏற்பட்டுள்ளது.பிலிப்பைன்சில் பி.டி., பயிர் வயல்களுக்கு அருகில் வசிப்போருக்கு, பயிர்களில் மகரந்தம் உதிரும் நேரத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பி.டி., சோளத்தை உட் கொண்ட எலிகளின் சிறுநீரகங்கள் சிறுத்துப் போனதை மான்சான்டோ நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளதாக வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர் ராஜதுரை தெரிவித் துள்ளார்.இப்படி எவ்வளவோ ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஆதாரப்பூர்வமான வாதங்களை ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளனர்.

ஆனால்... மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தால், சந்ததியற்ற சமுதாயம் சந்தடியில்லாமல் உருவாகும், நோயற்ற வாழ்வுக்கு சாத்தியம் குறைவு, நாளைய உணவுக்கு அன்னியரிடம் கையேந்த வேண்டி வரும் என, "மனசாட்சியுள்ள' விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் வேதனையுடன் போராடிக் கொண்டிருக்க...இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அர்த்தமற்றவை; விவசாயிகளின் நலன்(!) கருதியே பி.டி., அனுமதிக்கப்படுகிறது என்று அரசு இயந்திரங்களைச் சார்ந்த விஞ்ஞானிகள்(?) மட்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கேரளாவிலும் கர்நாடகத்திலும் மக்கள் நலன் கருதி பி.டி.,க்கு தடை விதிக்கப்பட்டிருக்க தமிழக முதல்வர் மட்டும், "உத்தரவு வரும் வரை பி.டி.,யை அனுமதிக்கக் வேண்டாம்' என கேட்டுக் கொண்டிருக்கிறார்.எது எப்படியோ, அன்னிய நாடுகளில் எலிக்கும், ஆட்டுக்கும், முயலுக்கும் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததை இந்தியாவில் மனிதர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்க்க அன்னிய சக்திகள் முயல்கின்றன என்பது மட்டும் இங்கு தெளிவாகிறது.இந்திய மக்களை அன்னிய பன்னாட்டு ஆய்வுக் கூடங்களின் எலிகளாக்க நமது ஆட்சியாளர்களும் முடிவு செய்துவிட்டனர் என்பதுதான் இங்கு துரதிருஷ்டம்.

                                                                 -நன்றி தினமலர்.

No comments:

Post a Comment