Monday, March 8, 2010

பெண்கள் தினம் எப்போது வந்தது?

ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்.,28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட் டது.

* பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப் பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

* இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

* அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

* அதன் பின்னரும் பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கு உரிய உரிமை, சலுகை எதுவும் கிடைக்கவில்லை. 1946ல் தான் பெண்கள் ஓரளவு உரிமை பெற துவங்கியுள்ளனர் என்று அங்கீகரித்து, அது முதல் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் இச்சமயத்தில், பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பெண்கள் சொந்த காலில் நிற்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளனர் என்று தான் கூற வேண்டும்.பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த நாடுகளில் கூட, இப்போது போர் முனைக்கு போகும் அளவுக்கு பெண்கள் உயர்ந்து வருகின்றனர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது தானே!கரண்டி பிடித்த கைகள் இன்று கம்ப்யூட்டரில் விளையாடுகிறது. நவீன உலகில் எந்த துறையானாலும், ஆண்களுக்கு சமமாக அதில் புகுந்து சாதிக்க ஆரம்பித்து விட்டனர். இனி, அவர்களது வளர்ச்சியை எந்த முட்டுக் கடைப் போட்டும் தடுக்க முடியாது. ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்து வந்த பல துறைகளில் முதன் முதலாய் தங்கள் காலடி வைத்து ஆண்கள் உலகை ஆட்டம் காண வைத்து வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினம் : இன்று சர்வதேச பெண்கள் தினம். பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளா தாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாராட்டும் வகையிலும் இன்றைய தினத்தை கொண்டாட வேண்டும். சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் மற்றும் சில நாடுகளில் இந்நாள் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்று அறிவிக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் தாயார், மனைவி, சகோதரி மற்றும் சக பெண் பணியாளர்களுக்கு ஆண்கள் பரிசுகள் வழங்கி வருகின்றனர். சில நாடுகளில் அன்னையர் தினத் திற்கு சமமாக இத்தினத்தை கடைபிடிக்கின்றனர். உலகில் இன்று பெண்கள் பிரதமராகவும், விண்வெளி வீராங்கனையாகவும், டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், பைலட்களாகவும், ராணுவ வீரர்களா கவும், விளையாட்டு வீராங்கனைகளாகவும், விளம்பர மாடலிங்காகவும் , தொழிலதிபர்களாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் மேலும் பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெண்களின் சாதனைகள் : இந்திய வரலாற்றில் பெண்கள் பிரதம ராகவும், ஆட்சியாளர்களாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். இன்று ஜனாதிபதியாகவும், முதல்வராகவும், சபாநாயகராகவும், எதிர்கட்சி தலை வராகவும் பெண்கள் இருக்கின்றனர். பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்திருப்பதில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. பெண்கள் ஆண்களுக்கு சமமாக சட்டரீதியான உரிமைகளை பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சம அந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வி யறிவு உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரம் சற்று பின்தங்கியே உள்ளது. பெண் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளான பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், பெண் அடிமைத்தனம் போன்றவை தடுக்கப் பட்டுள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமை, வரதட்சணை, பேறுகால மரணம், தீ விபத்துகளுக்கு ஆளாவது என பெண் கொடுமைகள் இன்றும் தொடர்கின்றன. அரசியல், தொழில், கல்வி, போன்றவற்றில் ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண்கள் இன்னும் உயரவில்லை. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

சாதனை படைக்க பெண்கள் : ஆண்களை விட பெண்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். பெண்களை குளிரும், உஷ்ணமும் அதிகமாகப் பாதிப்பதில்லை.இயற்கையிலேயே பெண்களுக்கு மனோ பலமும், உடல்பலமும் இருக்கிறது. பெண் குழந்தைகளே ஆண் குழந்தைகளை விட, இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நடக்கப் பழகி விடுகின்றன; விரைவில் பல் முளைப்பதும் பெண் குழந்தைகளுக்குத் தான்.வார்த்தைகளை சுத்தமாக உச்சரிப்பதும் பெண் குழந்தைகள் தான். பெண்களுக்குத் தான் புத்திக்கூர்மை அதிகம் என்கிறது விஞ்ஞான ஆய்வு முடிவு.

"எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!'

                                                                          - பாரதியார்

No comments:

Post a Comment